இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 30 ஜூலை, 2013

சென்ரியு

சென்ரியு
(சுருக்கமாகச் சொல்வதென்றால் கவித்துவம் அதிகமாக இருந்தால் ‘ஹைக்கூ’. கவித்துவம் குறைந்து நகைச்சுவை உணர்வு மேலோங்கி இருந்தால் அது ‘சென்ரியு’. )

சென்ரியுவும் ஜப்பானிய மொழிக்கவிதை. 3 அடிகள் கொண்டது. ஜென் தத்துவம், இயற்கை மற்றும் மெய்யியலோடும் சிறிது தொடர்பு கொண்டு நகைச்சுவை உணர்வை நோக்கமாகக் கொண்டு எழுதப்படுவது சென்ரியு ஆகும். சென்ரியு சமூகம், அரசியல் ஆகியவை குறித்து நகைச்சுவை உணர்வோடும் அங்கத உணர்வோடும் வெளிப்படுத்தும். 

‘சென்ரியு’ என்னும் புனைப்பெயரைக் கொண்ட ‘கராய்ஹச்சிமோன்’ என்னும் ஜப்பானியக் கவிஞர் கி.பி. 18ஆம் நூற்றாண்டில் இவ்விலக்கியத்தை அளித்தார். பின்னர் அக்கவிஞரின் புனைப் பெயரே அக்கவிதை வகைகளுக்கான பெயரும் ஆயிற்று. தமிழில் இவ்வகையை நகைப்பா என்கிறார்கள். 

தமிழ்நாட்டு ‘சென்ரியு’ 3 அடிகள் கொண்டு எழுதப்படுகிறது. அவ்வாறு 3 அடிகள் கொண்டு எழுதப்படுவதை தமிழ் அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு ‘சென்ரியு’ வடிவமாகவும் அங்கீகரித்துள்ளார்கள். இது இந்திய சமூகம், அரசியல் ஆகியவை குறித்த போக்கை நகைச்சுவை உணர்வோடும் அங்கத உணர்வோடும் வெளிப்படுத்த ஏற்ற மிகச் சிறந்த வடிவம் ஆகும். எனவே இந்தியாவின் சூழலுக்கு தமிழில் ‘ஹைக்கூ’வை விட ‘சென்ரியு’ சிறந்த வடிவம் /உள்ளடக்கம் ஆகும்.

தேனீர்க் கடைகளிலும், மதுபானக் கடைகளிலும் ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு இவ்வகைக் கவிதைகளைச் சொல்லும் மரபு ஜப்பானில் இயல்பாக இருக்கிறது. சென்ரியு கவிதைகளை யார் வேண்டுமானாலும் எழுதலாம். ஏனெனில் அதற்கு எதை எழுத வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை என்பதால் எதை வேண்டுமானாலும் அந்த வடிவத்துக்கு உட்பட்டு எழுதலாம். (ஹைக்கூ எழுத சிறிதாவது நுன்மான் நுழைப்புலம் வேண்டும்) நீங்கள் கூட ஒரு நாளைக்கு ஒரு செய்தித்தாள் மட்டுமே கூட வாசித்தால் ஏறக்குறைய 100 சென்ரியு கவிதைகள் எழுதிவிட முடியும். தேனீர்க் கடைகளிலும், மதுபானக் கடைகளிலும் எளிய மனிதர்கள் இலக்கிய நயங்களை, இயற்கையை, கவித்துவத்தை, கவிதைப் பற்றிய உட்சிந்தனையை விரும்பாதவர்கள் ஒருவரோடு ஒருவர் களிப்பூட்டிக் கொள்ளும் முறையில் பேசிக்கொள்ளும் போது, அங்கதக் கவிதைகளில் அர்த்தச் செறிவும் கவித்துவமும் ஹைக்கூவாகவும் பேசிக் கொண்டிருக்க மாட்டார்கள் என்பது நாம் அறிந்ததே.

இயற்கை, மெய்யியல் மற்றும் கவித்துவம், குறியீடு, படிமம், தொன்மம் ஆகியவற்றையும் அவற்றின் வகைகளையும் கருத்துச் செறிவையும் கொண்டதாக இருக்கும் ஹைக்கூவைத் தவிர பிற அனைத்தும் சென்ரியு வகையைச் சேர்ந்ததாகும். நம்பிக்கையிழந்ததால், பிற சூழ்நிலைகளை இழித்துப் பேசும் தன்மையும் இவற்றில் உண்டு. பல சென்ரியுக்கள் கருத்தில் நேர்த்தியில்லாத, சிறிதும் கலையழகும் வேலைப்பாடுமற்ற வெளிப்படையான விமர்சனங்கள் ஆகும். 

மூட நம்பிக்கைகள், காதல் மற்றும் அதோடு தொடர்புடைய பலவும், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பிச்சை, வறுமை, சாதி, மதம், வரதட்சணை, பெண்ணியத்தின் சாடல் போன்ற சமுதாயச் சீர்கேடுகளும், நீதியின் முரண்பாடுகள், நோய்கள், அன்றாடச் செய்திகள், அரசியல் சார்ந்த விமர்சனங்கள் மற்றும் புகழ்பாடுதல், உரைநடை போன்ற அமைப்பில் நேரடியாகக் கருத்தை சொல்லுதல் மற்றும் அறிவுறுத்தல்கள், இவை போன்ற பிற (புதுக் கவிதையில் கருப்பொருளாகப் பயன்படுத்தும் மேலும் பல) அனைத்தும் சென்ரியு வகையைச் சார்ந்தவையாகும். தமிழ் ஹைக்கூக் கவிஞர் பெரும்பான்மையும் இவ்வகைக் கவிதைகளையே அதிகம் படைத்துவிட்டு ஹைக்கூ என்று தலைப்பிட்டுக் கொள்கிறார்கள். தற்போது உங்களால் எது ஹைக்கூ? எது சென்ரியு? என்று பிரித்து அடையாளம் காண முடியும் என நினைக்கிறேன்.

தமிழ் ஹைக்கூ, ஜப்பானியப் பாரம்பரியத்தைப் பின்பற்றுவதாய்த் தெரியவில்லை. இதற்குப் படைப்பாளர் சிலரின் அறியாமையும், ஒரு காரணமாயிருக்கலாம், சிலர் அதனைப் பொருட்படுத்தாமையும் காரணமாயிருக்கலாம் என்கிறார் டாக்டர் பட்டத்துக்காகத் தமிழ் ஹைக்கூக்களைப் பல்கலைக்கழகத்துக்காக ஆய்வு செய்த நிர்மலா சுரேஷ் அவர்கள்.

தமிழில் முதன்முதலாக ஈரோடு தமிழன்பன் ‘சென்ரியு’ படைத்துள்ளார். தமிழில் சிலரே ‘சென்ரியு’ எழுதி வருகிறார்கள். தமிழில் ‘ஹைக்கூ’ பற்றிய சரியான புரிதல் இல்லாமல் எழுதப்படும் ‘ஹைக்கூ’ எல்லாம் ‘சென்ரியு’ கவிதையாகவே காணப்படுகின்றன. 

குருக்களாகிவிட்ட கடவுள்
மறுபடியும் கடவுளாகவில்லை
தட்டு நிறையக் காணிக்கை - ஈரோடு தமிழன்பன் - சென்ரியு

யார் சொல்லிக் கொடுத்தவன்?
அடி பிள்ளைக்கு
வலி வாத்தியாருக்கு - ஈரோடு தமிழன்பன் - சென்ரியு

ஹைக்கூ , சென்ரியு , லிமரைக்கூ வடிவம்

ஹைக்கூ , சென்ரியு , லிமரைக்கூ வடிவம்

ஹைக்கூ

‘ஹை’ என்பதற்கு ஜப்பானிய அடிச் சொல்லுக்கு அணுத்தூசி, கரு, முழுமையான கரு என்ற பொருள் உண்டு. ‘கூ’ என்பது சொற்றொடர், வெளிப்பாடு, வாக்கியம், பகுதி, ஒரு வரி, ஓர் அடி, ஒரு செய்யுள், ஒரு கவிதை என்றும் பொருள் தருகிறது.

இவற்றை இணைத்துப் பார்க்கையில் ஹைக்கூ என்பது கரு போன்றும், உயிரணு போன்றும் உருவானதொரு கவிதை என்னும் முழுப்பொருளைத் தரும். மேலும் வளர்ச்சிக்கும் விரிவுக்கும், ஒரு கருவுக்கு உள்ளிருக்கும் இன்னொரு கவிதைக் கருவைக் காண்பதற்கும் ஹைக்கூ என்ற சொல் சிறப்பாக அமைந்திருப்பதைக் காணலாம்.

‘ஹைக்கூ’ ஜப்பானிய மொழிக் கவிதை. 3 அடிகள் கொண்டது. மூன்று அடிகள் கொண்ட ஜப்பானிய ஹைக்கூ ஐந்து, ஏழு, ஐந்து சீர்களைக் கொண்டு 17 சீர்களில் ஹைக்கூ படைக்கப்படும் (தமிழுக்கு இந்த சீர் எண்ணிக்கை தேவையில்லை). ஜென் தத்துவத்தோடு இயற்கை மற்றும் மெய்யியலோடு தொடர்பு கொண்டது. கவித்துவம் கொண்டது. இந்தியாவின் (தமிழ்நாடு உள்பட) சூழலுக்கு ஜப்பானிய ஹைக்கூவின் உள்ளடக்கக் கோட்பாடு பொருந்தி வராது என்ற போதிலும் எப்படியோ இந்தியாவில் (தமிழ்நாடு உள்பட) ஓர் இலக்கிய வடிவமாக / கவிதையாக இடம் பிடித்துவிட்டது. பெரும்பான்மையாக தமிழ்நாட்டு ஹைக்கூ 3 அடிகள் கொண்டு எழுதப்படுகிறது. அவ்வாறு 3 அடிகள் கொண்டு எழுதப்படுவதை தமிழ் அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு ‘ஹைக்கூ’ வடிவமாகவும் அங்கீகரித்துள்ளார்கள். 

இந்தியாவின் (தமிழ்நாடு உள்பட) சூழலுக்கு ஜப்பானிய ஹைக்கூவின் உள்ளடக்கக் கோட்பாடு பொருந்தி வராது என்ற போதிலும் தமிழ் ‘ஹைக்கூ’ இயற்கை, மெய்யியல் மற்றும் கவித்துவம், குறியீடு, படிமம், தொன்மம் ஆகியவற்றையும் அவற்றின் வகைகளையும் கருத்துச் செறிவையும் கொண்டதாக இருப்பது சிறப்பு. இன்று எழுதப்படுவதெல்லாம் ‘புதுக்கவிதை’ என்பது போல ‘ஹைக்கூ’ பற்றிய சரியான புரிதல் இல்லாமல் 3 அடிகள்கொண்டு எழுதப்படுவது எல்லாம் ‘ஹைக்கூ’ என்பதால் ஹைக்கூவின் உள்ளடக்கம் தாழ்ந்துபோய் உள்ளது. ஜப்பானிய ஹைக்கூவின் தமிழ் மொழிபெயர்ப்பை தவிர்த்து விட்டால் 1974ல் கவிக்கோ அப்துல் ரகுமான் தமிழில் முதன்முதலாக ஹைக்கூ படைத்துள்ளார். இன்று பல ஆயிரம் பேர் தமிழில் ஹைக்கூ எழுதி வருகிறார்கள். தமிழில் ‘ஹைக்கூ’விற்கென்றே சில தனி சிற்றிதழ்கள் வெளிவந்து கொண்டுள்ளன.

இன்றைய ஹைக்கூக் கவிஞர்கள் பெரும்பான்மையினர் தங்களை ஹைக்கூக் கவிஞர்கள் என்று கூறிக் கொள்ள வேண்டும் அல்லது தொடர்ந்து ¨ஹைக்கூவிற்குள் இயங்கிக் கொண்டிருப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்ற தன்முனைப்புக்காகச் சென்ரியு வகைக் கவிதைகளை நிறைய படைத்து அதனை ஹைக்கூ என்று பெயரிட்டு வெளியிட்டு வருகிறார்கள் என்பது உண்மை. இதன் காரணமாகச் சென்ரியு என்ற ஒரு வடிவம் இருப்பதை அவர்களால் வெளிக்காட்டாமல் இருட்டடிப்பும் செய்யப்படுகிறது. இந்த நிலை இன்னும் ஓராண்டுவரை நீடித்தால் கூட சென்ரியு கவிதைகள் தான் தமிழின் ஹைக்கூக் கவிதைகள் என்று வாசகர்கள் மனத்தில் பதிந்துபோய்விடும். 

ஜப்பானிய மொழியில் இன்னும் - இன்றும் ஹைக்கூ, ஹைக்கூவாகவேதான் இருக்கிறது. ஹைக்கூவை எழுத முடியாதவர்கள் சென்ரியு வகையை நாடிச் சென்றுவிடுகிறார்கள். ஹைக்கூவின் பிறிதோரு வகையான நகைச்சுவை, வேடிக்கை, சமூக கேலி கிண்டல்களை உள்ளடக்கமாகக் கொண்டதுதான் சென்ரியு. 

இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் ஹைக்கூ கவிஞர்கள் என்று குறிப்பிட்டுக் கொள்ளும் பலரும் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ளவேண்டும். ஆயிரக்கணக்கான ஹைக்கூக்கள் படைத்துள்ளதாகக் காட்டிக்கொள்ளவேண்டும் என்ற போலியான / தன்முனைப்பால்(Ego) சென்ரியு வகை கவிதைகளைப் படைத்து ஹைக்கூ என்ற தலைப்பில் கவிதைத் தொகுதியாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஹைக்கூவின் உள்ளடக்கம் வேறு. சென்ரியுவின் உள்ளடக்கம் வேறு என்று ஹைக்கூ பற்றி அவர்களுக்குத் தெரிந்திருந்தும், உண்மையான ஹைக்கூவை எழுத (நிறைய எழுத) முடியாதக் காரணத்தால் சென்ரியு வகைக் கவிதைகளை எழுதிக் குவித்துவிட்டு ஹைக்கூ என்று சொல்லிக் கொள்கிறார்கள். தவறான வழிகாட்டியாவும் திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 

தமிழ்நாட்டில் ஒருவர் எழுதிய ஹைக்கூக் கவிதைகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுதான் ‘ஹைக்கூக் கவிஞர்’ என்று அழைக்கின்றனர் அல்லது பட்டம் கொடுக்கப்படுகிறது. இது தவறு. ஒருவர் ஓரிரு ஹைக்கூவைச் சிறப்பாகப் படைத்தாலும் அவர் ஹைக்கூக் கவிஞர்தான் என்று ஏற்றுக் கொள்ளும் ஜப்பானியர்களின் மனநிலை தமிழ்நாட்டிலும் பரவலாக்கப்பட வேண்டும்.

ஹைக்கூ மரபுகள்

1. ஹைக்கூ மூன்று வரியாக இருக்க வேண்டும். (ஒரு வாக்கியத்தையே பிரித்து மூன்று அடியாக்கி ஹைக்கூ எழுதக் கூடாது. ஹைக்கூவில் ஒவ்வொரு அடியும் ஒரு வாக்கியம் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.)
2. ஹைக்கூவுக்குத் தலைப்பிட்டு எழுதக் கூடாது. ஒரு ஹைக்கூவிற்கு இரண்டுக்கு மேற்பட்ட அல்லது குறைந்த பட்சம் இரண்டு உட்கருத்தாவது (குறியீடு போல; உட்பொருள்) இருக்க வேண்டும். (ஹைக்கூவுக்குத் தலைப்பிடக்கூடாது என்பதற்கானக் காரணம் இதுதான். தலைப்பைத் தாண்டிச் சிந்திப்பதைத் தடை செய்கிறது. ஒரு ஹைக்கூவின் உட்பொருள் (குறியீடு போல்) விரிந்து செல்வதாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டு ஹைக்கூக்கள் பெரும்பான்மையும் ஒற்றைப் பரிமாணத்தில்தான் வருகின்றன. ஒரு உண்மையான ஹைக்கூ குறைந்தபட்சம் இரண்டு உட்பொருளையாவதுத் தாங்கி இருப்பது சிறப்பு.)

கவிக்கோ அப்துல் ரகுமான் கூற்று:
ஹைக்கூவில் நாம் கடைபிடிக்க வேண்டிய மூன்று முக்கிய மரபுகள் உண்டு.
1.ஹைக்கூவில் முதல் அடி ஒரு கூறு. ஈற்றடி ஒரு கூறு. ஹைக்கூவின் அழகும் ஆற்றலும் ஈற்றடியில்தான் உள்ளது. ஈற்றடி ஒரு திடீர் வெளிப்பாட்டை, உணர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி முழுக் கவிதையையும் வெளிச்சப்படுத்த வேண்டும்.
2.மற்றொரு மரபு ஹைக்கூவின் மொழி அமைப்பு. ஹைக்கூவின் மொழி ஊழல் சதையற்ற மொழி. தந்தி மொழியைப் போல், அவசியமற்ற இணைப்புச் சொற்களை விட்டு விட வேண்டும். (ஹைக்கூ எளிய சொற்கள் கொண்டும் குறைந்த வார்த்தைகளைக் கொண்டும் இருப்பது சிறப்பு. படைப்பாளர் எல்லாவற்றையும் விவரித்துக்கொண்டு இருக்கக்கூடாது. விவரிப்பது வசனம் அல்லது புதுக்கவிதையின் வேலை.)
3.உயிர் நாடியான ஈற்றடியில் ஆற்றல் மிக்க வெளிப்பாட்டிற்காகப் பெயர்ச் சொல்லையே பயன்படுத்த வேண்டும்.

மேற்கண்டவற்றை ஹைக்கூப் படைப்பாளர்கள் கடைபிடிக்க வேண்டும். ஏனென்றால் ஹைக்கூவின் அடையாளமும், அழகும், ஆற்றலும் இவற்றில்தான் இருக்கின்றன.

ஹைக்கூ வாசிப்பு முறை
ஹைக்கூவை முறையாக எப்படி வாசிக்க வேண்டும் என்ற புரிதல் ஹைக்கூ எழுதுபவர்களுக்குக் கூட தெரியாமல் இருப்பது வினோதமானது. 3 அடிகள் கொண்ட ஹைக்கூவை முதல் இரண்டு அடிகளை தொடர்ந்து படித்து நிறுத்த வேண்டும்(மூன்றாவது அடியைப் படிக்கக் கூடாது). மீண்டும் முதல் இரண்டு அடிகளை படித்து நிறுத்தி மூன்றாவது அடியைப் படிக்க வேண்டும். அப்படிப் படிக்கும் போது அந்த இறுதி அடி எதிர்பாராதத் திருப்பம் கொண்டதாக இருக்க வேண்டும். இப்போது ஹைக்கூ எழுதுபவர்கள் இந்த எளிமையான முறையை மட்டுமே கடைபிடித்தால் கூட அவர்கள் எழுதும் ஹைக்கூவை மேலும் சிறப்பாகப் படைக்க முடியும். 

இருண்மை

இருண்மை

மரபுக்கவிதை

இருண்மை (Obscurity) என்பது, கவிஞனுக்கும் வாசகனுக்கும் இடையில் கருத்துப் பரிவர்த்தனை முழுமையாக நடைபெறாத நிலையைச் சுட்டுவதாகும். இதற்கு வாசகனும் காரணம்; கவிஞனின் சோதனை முயற்சியும் காரணம். புரியாததுபோல் இருந்து படிக்கப் படிக்கப் புரியத் தொடங்கும் படிமுறைப் புரிதலை உடையது இது.
மரபுக்கவிதையின் பொருள், அகராதி கொண்டு புரிந்து கொள்ளத்தக்கதாக உள்ளதே தவிரப் புரியாமல் இல்லை. எனினும், குழூஉக்குறியாகப் பல்வேறு சொற்களைச் சித்தர்கள் கலைச் சொற்களாகக் கொண்டு பாடி வைத்துள்ளனர்.

புதுக்கவிதை

பொருளைச் சொல்ல விரும்பாமல், உணர்த்த விரும்பும் இருண்மை உத்தி புதுக்கவிதைகளிலேயே மிகுதியும் கையாளப் பெறுகிறது. மாடர்ன் ஆர்ட்போன்றது இது எனலாம்.
நிஜம் நிஜத்தை நிஜமாக
நிஜமாக நிஜம் நிஜத்தை
நிஜத்தை நிஜமாக நிஜம்
நிஜமும் நிஜமும் நிஜமாக
நிஜமோ நிஜமே நிஜம்
நிஜம் நிஜம் நிஜம்.
என்னும் ஆத்மாநாமின் கவிதை இத்தகையது.
இவ்வாறு உத்திமுறைகள் இருவகைக் கவிதைகளிலும் சிறந்து விளங்கக் காண்கிறோம்

nanr Kaviaruvi Ramesh.

உரையாடற்பாங்கு

உரையாடற்பாங்கு

மரபுக்கவிதை

உரைநடையில் அமையும் நாடகம், நாவல் ஆகியவற்றில் மட்டுமன்றிச் செய்யுளிலும் உரைநடை அமைவதுண்டு. கலித்தொகை, சிலப்பதிகாரவழக்குரை காதை, காப்பியங்கள், தனிப் பாடல்கள் எனப் பலவற்றில் உரையாடற்பாங்கு மரபுக்கவிதையில் அமைந்துள்ளமையைக் காண்கிறோம்.
சிவப்பிரகாசர், தம் இளவல்களுக்கு மணம் செய்வித்து வாழ்த்தியபோது பாடிய தனிப்பாடல் வருமாறு :
அரனவ னிடத்திலே ஐங்கரன் வந்துதான்
‘ஐயஎன் செவியை மிகவும்
ஆறுமுகன் கிள்ளினான்’ என்றே சிணுங்கிடவும்
அத்தன்வே லவனை நோக்கி
விரைவுடன் வினவவே ‘அண்ணன்என் சென்னியில்
விளங்குகண் எண்ணினன்’ என
வெம்பிடும் பிள்ளையைப் பார்த்துநீ அப்படி
விகடம் ஏன்செய் தாய்என
‘மருவும்என் கைந்நீள முழம்அளந் தான்’என்ன
மயிலவன் நகைத்து நிற்க
மலையரையன் உதவவரும் உமையவளை நோக்கி நின்
மைந்தரைப் பாராய் எனக்
கருதரிய கடலாடை உலகுபல அண்டம்
கருப்பமாப் பெற்ற கன்னி
கணபதியை அருகழைத்து அகமகிழ்வு கொண்டனள்
களிப்புடன் உமைக்காக்கவே
இதில் விநாயகனுக்கும் முருகனுக்குமிடையிலான விளையாட்டுச் சண்டையும் முறையீடுகளும் இடம் பெற்றுள்ளன.

புதுக்கவிதை

அரசியல்வாதியிடம் நிருபர் பேட்டியெடுப்பதாய் ஈரோடு தமிழன்பன் கவிதை வழங்குகிறார்.
‘தாங்கள் தவறாது
படிக்கும் பத்திரிகை எது?’
‘படிப்பது வழக்கமில்லை
பத்திரிகைகளுக்குச் செய்தி
வழங்குவது வழக்கம்’
'தாங்கள் அரசியல்துறவு 
பூணுவதாக 
எண்ணம் உண்டா?'
‘இல்லை. . . 
அரசியல்வாதிகளை
அநாதைகளாக்கமாட்டேன் நான்’

தொன்மம்

தொன்மம்

மரபுக்கவிதை 

புராண இதிகாச வரலாறுகளை உடன்பாட்டு நிலையிலோ எதிர்மறைநிலையிலோ, உள்ளவாறோ மாற்றியோ எடுத்துரைப்பது தொன்மம்ஆகும். 
மாசற்ற நெஞ்சுடையார் வன்சொல்இனி(து) ஏனையவர் 
பேசுற்ற இன்சொல் பிறிதென்க - ஈசற்கு 
நல்லோன் எறிசிலையோ, நன்னுதால் ! ஒண்கருப்பு 
வில்லோன் மலரோ விருப்பு (நன்னெறி)
என்னும் பாடலில், சாக்கிய நாயனார் சிவலிங்கத்தின்மீது வழிபடும் நோக்கத்தோடு கல் எறிந்தது விருப்பத்திற்குரியதாயிற்று. 'மன்மதன் மலரம்புகளை வீசினான் எனினும் சிவபெருமானின் தவத்தைக் கலைக்க வீசப்பட்டதாதலின் வெறுப்புக்குரியதாயிற்று’ எனப் புராண வரலாற்று நிகழ்வுகள் சுட்டப் பெறுகின்றன.

புதுக்கவிதை

தொன்மக் குறியீடு என்பதாக இது புதுக்கவிதையில் சுட்டப்பெறுகின்றது. இன்றைய அரசியல் உலகில் சுயநலம் கருதி அடிக்கடி கட்சித்தாவல் செய்யும் அரசியல்வாதிகளின் செயல்களை, 
தாயங்களில் - சகுனி 
வெற்றிச் சரிதத்தின் அத்தியாயங்கள் 
வளர்க்க வளர்க்க . . . 
மாயக் கண்ணன் 
கட்சி மாறுகிறான்
எனப் பாரதக்கதையை மாற்றியமைத்துள்ளார் ஈரோடு தமிழன்பன்.