இன்றைய கஜல்கள்
“பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்த கஜல் வடிவமானது காதலையும், இறைமையையும் மட்டும் பாடாமல், வாழ்வின் எதார்த்தங்களையும் தெளிவாகப் படம் பிடித்திட வேண்டும் என்று ஹலி என்பவர் குரல் கொடுத்தார். இவரைத் தொடர்ந்து அக்பர் அல்லாபதி, இக்பால் போன்றோர் இக்கொள்கையை வலியுறுத்தினர். அதோடு மட்டுமல்லாது சமூக, அரசியல், மனிதம் போன்ற வாழ்வின் எல்லாத் துறைகளைப் பற்றியும் பாடப்படுதலாக கஜல் இருந்திட வேண்டும் என்றனர்” என்று சாதிக் முகம்மது கூறுகிறார்.
கஜல் கவிதையில் ஆழம் கண்ட கவிஞர்களான மஜாஸ், ஜாஸ்பி, அக்தர் அன்சாரி, ஃபாயிஜ், மஜ்ரூத் சுல்தான்புரி, பல்வேஸ் ஷாஹிதி, குலாம் ரப்பானி தாபன், ஜான் நிஸார் அக்தர் போன்றோரெல்லாம் காதலை மட்டுமே மையமாக வைத்துப் படைக்காமல், சமூக அரசியல் புத்துணர்வுக் கொள்கைகளைக் கொண்டு, மனித மனத்தோடு எந்த ஆடம்பரமும் இல்லாமல் எளிமையாக உறவாடக் கூடிய வகையில் கஜல்களைப் படைத்து வெற்றிவாகைச் சூடினர்.
இன்றைய இளம் கவிஞர் பட்டாளமானது, கஜலின் பரிமாணங்களைச் செழுமைப்படுத்திடும் சீரிய பணியில் தம்மை இணைத்துக் கொண்டுள்ளது. “ஹசன்நயிம், பானி, ஷா தம்கானாத், கிருஷ்ணா மோகன், ஷாரியார், பஷீர் பத்ர், மக்மூர் சய்தி போன்றோர் இன்றைய குறிப்பிடத்தக்க கஜல் கவிஞர்கள் ஆவர். ஹசன் நயிம் டெல்லியில் ‘கஜல் அகாதெமி’ என்ற ஒன்றை நிறுவி நவீன கஜல் வடிவத்தை இளைய தலைமுறைக் கவிஞர்கள், வாசகர்களிடையே பரப்பி வருகிறார்”29 என்று இந்திய ஒப்பிலக்கிய நூல் சுட்டிக் காட்டுகிறது.
தமிழில் கஜல் கவிதையின் வடிவ முயற்சி மிக அரிதாகவே நிகழ்ந்துள்ளது. உருது, பாரசீக மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்களே கஜல் கவிதையின் வடிவத்தை உள்வாங்கி அதைப் பிற மொழிகளில் அறிமுகம் செய்ய இயலும். தமிழகத்தைப் பொறுத்தவரை உருது பாரசீக மொழிகளில் தேர்ச்சியும், புலமையும் மிக்கவர்களாக இசுலாமியர்களே திகழ்வதால், தமிழில் கஜல் கவிதையின் அறிமுக முயற்சி இவர்களின் புலமையைச் சார்ந்தே அமைகிறது.
அப்துல் ரகுமான் உருது மொழியைத் தாய் மொழியாகக் கொண்டு, மதுரையில் பிறந்து, தியாகராயர் கல்லூரியில் தமிழ் இலக்கிய இலக்கணத்தை முறைப்படி கற்றுத் தேர்ந்தவராதலின், தமிழில் கஜல் வடிவக் கவிதையை அறிமுகம் செய்யும் முயற்சி அவருக்கு சாத்தியமாகியுள்ளது.