இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 30 ஜூலை, 2013

சென்ரியு

சென்ரியு
(சுருக்கமாகச் சொல்வதென்றால் கவித்துவம் அதிகமாக இருந்தால் ‘ஹைக்கூ’. கவித்துவம் குறைந்து நகைச்சுவை உணர்வு மேலோங்கி இருந்தால் அது ‘சென்ரியு’. )

சென்ரியுவும் ஜப்பானிய மொழிக்கவிதை. 3 அடிகள் கொண்டது. ஜென் தத்துவம், இயற்கை மற்றும் மெய்யியலோடும் சிறிது தொடர்பு கொண்டு நகைச்சுவை உணர்வை நோக்கமாகக் கொண்டு எழுதப்படுவது சென்ரியு ஆகும். சென்ரியு சமூகம், அரசியல் ஆகியவை குறித்து நகைச்சுவை உணர்வோடும் அங்கத உணர்வோடும் வெளிப்படுத்தும். 

‘சென்ரியு’ என்னும் புனைப்பெயரைக் கொண்ட ‘கராய்ஹச்சிமோன்’ என்னும் ஜப்பானியக் கவிஞர் கி.பி. 18ஆம் நூற்றாண்டில் இவ்விலக்கியத்தை அளித்தார். பின்னர் அக்கவிஞரின் புனைப் பெயரே அக்கவிதை வகைகளுக்கான பெயரும் ஆயிற்று. தமிழில் இவ்வகையை நகைப்பா என்கிறார்கள். 

தமிழ்நாட்டு ‘சென்ரியு’ 3 அடிகள் கொண்டு எழுதப்படுகிறது. அவ்வாறு 3 அடிகள் கொண்டு எழுதப்படுவதை தமிழ் அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு ‘சென்ரியு’ வடிவமாகவும் அங்கீகரித்துள்ளார்கள். இது இந்திய சமூகம், அரசியல் ஆகியவை குறித்த போக்கை நகைச்சுவை உணர்வோடும் அங்கத உணர்வோடும் வெளிப்படுத்த ஏற்ற மிகச் சிறந்த வடிவம் ஆகும். எனவே இந்தியாவின் சூழலுக்கு தமிழில் ‘ஹைக்கூ’வை விட ‘சென்ரியு’ சிறந்த வடிவம் /உள்ளடக்கம் ஆகும்.

தேனீர்க் கடைகளிலும், மதுபானக் கடைகளிலும் ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு இவ்வகைக் கவிதைகளைச் சொல்லும் மரபு ஜப்பானில் இயல்பாக இருக்கிறது. சென்ரியு கவிதைகளை யார் வேண்டுமானாலும் எழுதலாம். ஏனெனில் அதற்கு எதை எழுத வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை என்பதால் எதை வேண்டுமானாலும் அந்த வடிவத்துக்கு உட்பட்டு எழுதலாம். (ஹைக்கூ எழுத சிறிதாவது நுன்மான் நுழைப்புலம் வேண்டும்) நீங்கள் கூட ஒரு நாளைக்கு ஒரு செய்தித்தாள் மட்டுமே கூட வாசித்தால் ஏறக்குறைய 100 சென்ரியு கவிதைகள் எழுதிவிட முடியும். தேனீர்க் கடைகளிலும், மதுபானக் கடைகளிலும் எளிய மனிதர்கள் இலக்கிய நயங்களை, இயற்கையை, கவித்துவத்தை, கவிதைப் பற்றிய உட்சிந்தனையை விரும்பாதவர்கள் ஒருவரோடு ஒருவர் களிப்பூட்டிக் கொள்ளும் முறையில் பேசிக்கொள்ளும் போது, அங்கதக் கவிதைகளில் அர்த்தச் செறிவும் கவித்துவமும் ஹைக்கூவாகவும் பேசிக் கொண்டிருக்க மாட்டார்கள் என்பது நாம் அறிந்ததே.

இயற்கை, மெய்யியல் மற்றும் கவித்துவம், குறியீடு, படிமம், தொன்மம் ஆகியவற்றையும் அவற்றின் வகைகளையும் கருத்துச் செறிவையும் கொண்டதாக இருக்கும் ஹைக்கூவைத் தவிர பிற அனைத்தும் சென்ரியு வகையைச் சேர்ந்ததாகும். நம்பிக்கையிழந்ததால், பிற சூழ்நிலைகளை இழித்துப் பேசும் தன்மையும் இவற்றில் உண்டு. பல சென்ரியுக்கள் கருத்தில் நேர்த்தியில்லாத, சிறிதும் கலையழகும் வேலைப்பாடுமற்ற வெளிப்படையான விமர்சனங்கள் ஆகும். 

மூட நம்பிக்கைகள், காதல் மற்றும் அதோடு தொடர்புடைய பலவும், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பிச்சை, வறுமை, சாதி, மதம், வரதட்சணை, பெண்ணியத்தின் சாடல் போன்ற சமுதாயச் சீர்கேடுகளும், நீதியின் முரண்பாடுகள், நோய்கள், அன்றாடச் செய்திகள், அரசியல் சார்ந்த விமர்சனங்கள் மற்றும் புகழ்பாடுதல், உரைநடை போன்ற அமைப்பில் நேரடியாகக் கருத்தை சொல்லுதல் மற்றும் அறிவுறுத்தல்கள், இவை போன்ற பிற (புதுக் கவிதையில் கருப்பொருளாகப் பயன்படுத்தும் மேலும் பல) அனைத்தும் சென்ரியு வகையைச் சார்ந்தவையாகும். தமிழ் ஹைக்கூக் கவிஞர் பெரும்பான்மையும் இவ்வகைக் கவிதைகளையே அதிகம் படைத்துவிட்டு ஹைக்கூ என்று தலைப்பிட்டுக் கொள்கிறார்கள். தற்போது உங்களால் எது ஹைக்கூ? எது சென்ரியு? என்று பிரித்து அடையாளம் காண முடியும் என நினைக்கிறேன்.

தமிழ் ஹைக்கூ, ஜப்பானியப் பாரம்பரியத்தைப் பின்பற்றுவதாய்த் தெரியவில்லை. இதற்குப் படைப்பாளர் சிலரின் அறியாமையும், ஒரு காரணமாயிருக்கலாம், சிலர் அதனைப் பொருட்படுத்தாமையும் காரணமாயிருக்கலாம் என்கிறார் டாக்டர் பட்டத்துக்காகத் தமிழ் ஹைக்கூக்களைப் பல்கலைக்கழகத்துக்காக ஆய்வு செய்த நிர்மலா சுரேஷ் அவர்கள்.

தமிழில் முதன்முதலாக ஈரோடு தமிழன்பன் ‘சென்ரியு’ படைத்துள்ளார். தமிழில் சிலரே ‘சென்ரியு’ எழுதி வருகிறார்கள். தமிழில் ‘ஹைக்கூ’ பற்றிய சரியான புரிதல் இல்லாமல் எழுதப்படும் ‘ஹைக்கூ’ எல்லாம் ‘சென்ரியு’ கவிதையாகவே காணப்படுகின்றன. 

குருக்களாகிவிட்ட கடவுள்
மறுபடியும் கடவுளாகவில்லை
தட்டு நிறையக் காணிக்கை - ஈரோடு தமிழன்பன் - சென்ரியு

யார் சொல்லிக் கொடுத்தவன்?
அடி பிள்ளைக்கு
வலி வாத்தியாருக்கு - ஈரோடு தமிழன்பன் - சென்ரியு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக