இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 30 ஜூலை, 2013

முரண்

முரண்

மரபுக்கவிதை

சொல்லாலோ, பொருளாலோ, சொற்பொருளாலோ முரண்பட அமைவது முரண் எனப்படும். இதனைத் தொடை வகையுள் ஒன்றாக யாப்பிலக்கணம் கூறும், அணிவகையுள் ஒன்றாக அணியிலக்கணம் கூறும். 'கடல், குளிர்ந்த சந்திரனின் கதிர்கண்டு பொங்கும்; வெப்பமான சூரியனின் கதிர்கண்டால் பொங்காது; அதுபோல உலகினர் இன்சொல் பேசுவோரைக் கண்டால் மனமகிழ்வர்; வன்சொல் பேசுவோரைக் கண்டால் மனமகிழார்’ என்கிறார் சிவப்பிரகாசர். 
இன்சொலால் அன்றி இருநீர் வியனுலகம் 
வன்சொலால் என்றும் மகிழாதே; - பொன்செய் 
அதிர்வளையாய் பொங்காது அழல்கதிரால் ; தண்என் 
கதிர்வரவால் பொங்கும் கடல் (நன்னெறி)
என்னும் பாடலில் இன்சொல் x வன்சொல், பொங்காது x பொங்கும் என முரண் சொற்களும் பொருள்களும் அமைந்துள்ளமையைக் காணலாம்.

புதுக்கவிதை

புதுக்கவிதைகளிலும் முரண் உத்தி அமைந்து, கவிதைக்குப் பெருமை சேர்க்கின்றது. 
படித்திருந்தாலாவது 
பரவாயில்லை என்று 
பாமரப்பெண் சிந்திக்க, 
படிக்காமலிருந்தாலாவது 
பரவாயில்லை என்று 
படித்தபெண் சிந்திக்க, 
பெண்கள் இங்கே தவிப்புத் தீவுகள்
என்னும் பொன்மணி வைரமுத்துவின் கவிதையில், படித்திருந்தால் x படிக்காமலிருந்தால், பாமரப் பெண் x படித்த பெண் என முரண்பாடுகள் அமையக் காண்கிறோம். ‘இக்கரைக்கு அக்கரை பச்சை’ என்னும் பழமொழிச் சாயலினது இது. 

nanri ;kaviaruvi ramesh

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக