Tuesday, July 30, 2013

கலிப்பா

கலிப்பா

கலிப்பாவின் இலக்கணத்தையும் கலிப்பா வகைகளையும் காண்போம்.

• கலிப்பா இலக்கணம்
• காய்ச்சீர் பயின்று வரும்; மாச்சீர், விளச்சீர், கூவிளங்கனி, கருவிளங்கனி ஆகியன வருதல் கூடாது.

• கலித்தளை பயின்று வரும்; பிற தளைகளும் வரலாம்.

• அளவடியுடையதாக அமையும்.

• துள்ளலோசை உடையது.

• தரவு, தாழிசை, அராகம், அம்போதரங்கம், தனிச்சொல், சுரிதகம் என்னும் ஆறு உறுப்புகளுள் ஏற்பனவற்றைக் கொண்டு நடக்கும்.
• கலிப்பா உறுப்புகள்
• தரவு: கலிப்பாவின் முதல் உறுப்பு; எருத்து எனவும் கூறப்பெறும்.

• தாழிசை: கலிப்பாவின் இரண்டாம் உறுப்பு; தரவைவிடக் குறைந்த இசையும் ஓசையும் உடையது. தரவைக்காட்டிலும் அடியளவில் குறைந்தது; இடைநிலைப்பாட்டு எனவும் பெறும். மூன்றடுக்கி வருதல் மிகுதி (அதாவது, ஒரே கருத்தை மூன்று முறை, வெவ்வேறு உவமைகளுடன் கூறுதல்).

• அராகம்: இசைத்தன்மையுடையது.

• அம்போதரங்கம்: கடலலைபோல் சுருங்கி வருவது;

• தனிச்சொல் : பொருள் தொடர்புடையதாய், ஓர் அசை (அ) சீர் தனித்து வருவது.

• சுரிதகம்: பாட்டினை முடிக்கும் உறுப்பு. வெண்பாச் சுரிதகம், ஆசிரியச் சுரிதகம் என இது இருவகைப்படும்.
• கலிப்பா வகைகள்
கலிப்பா நால்வகைப்படும். அவை:
தரவு, மூன்றடுக்கிய தாழிசை, தனிச்சொல், சுரிதகம் ஆகியன கொண்டது நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா எனப்படும்.
தாழிசையை அடுத்து அம்போதரங்கம் அமைவது அம்போதரங்கக் கலிப்பாவாகும்.
தாழிசையை அடுத்தும் அம்போதரங்கத்திற்கு முன்புமாக அராகம் அமைவது வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா எனப்பெறும்.

• ஒத்தாழிசைக் கலிப்பா
(எ.கா) (தரவு)
வாணெடுங்கண் பனிகூர வண்ணம்வே றாய்த்திரிந்து
தோணெடுந்தன் தகைதுறந்து துன்பங்கூர் பசப்பினவாய்ப்
பூணொடுங்கு முலைகண்டும் பொருட்பிரிதல் வலிப்பவோ?
(தாழிசை)
சூருடைய நெடுங்கடங்கள் சொலற்கரிய என்பவால்
பீருடைய நலந்தொலையப் பிரிவாரோ பெரியவரே? (1)

சேணுடைய கடுங்கடங்கள் செலற்கரிய என்பவால்
நாணுடைய நலந்தொலைய நடப்பாரோ நலமிலரே? (2)

சிலம்படைந்த வெங்கானம் செலற்கரிய என்பவால்
புலம்படைந்த நலந்தொலையப் போவாரோ பொருளிலரே? (3)
(தனிச்சொல்)
எனவாங்கு
(சுரிதகம்)
அருளெனும் இலராய்ப் பொருள்வயிற் பிரிவோர்
பன்னெடுங் காலம் வாழியர்
பொன்னெடுந் தேரொடு தானையிற் பொலிந்தே!
- இப்பாடல் ஆசிரியச் சுரிதகத்தால் இயன்ற நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பாவாகும். பிறவகைக் கலிப்பாக்களை இலக்கியங்களைப் பயின்று சுவைக்கலாம்.

• வெண்கலிப்பா
தரவு மட்டுமே பெறும்; அளவடிகளால் அமையும்; சிற்றெல்லை நான்கடிகள்; பேரெல்லைக்கு எல்லையில்லை; ஈற்றடி சிந்தடியாக வரும். கலித்தளை பயின்று வரும். வெண்சீர் வெண்டளையும் இடையிடையே வரும்.

(எ.கா)
முழங்குகுரல் முரசியம்ப முத்திலங்கு நெடுங்குடைக்கீழ்
பொழிந்தமதக் கருஞ்சுவட்டுப் பொறிமுகத்த களிறூர்ந்து
பெருநிலம் பொதுநீக்கிப் பெயராத பெருமையாற்
பொருகழற்கால் வயவேந்தர் போற்றிசைப்ப வீற்றிருப்பார்
மருள்சேர்ந்த நெறிநீக்கி வாய்மைசால் குணம்தாங்கி
அருள்சேர்ந்த அறம்புரிந்தார் அமர்ந்து

• கொச்சகக்கலிப்பா
கலிப்பா உறுப்புகள் முறைமாறியும், கூடியும் குறைந்தும் வருவது. உறுப்புகளுக்கேற்பத் தரவு, தரவிணை, சிஃறாழிசை, பஃறாழிசை, மயங்கிசை எனப் பெயர்பெறும் பல வகைகளையுடையது.
தரவு கொச்சகக் கலிப்பா குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் நான்கடியாலும், சிறுபான்மை ஐந்தடி (அ) எட்டடியாலும் இது அமையும்.

(எ.கா)
கற்பகத்தின் பூங்கொம்போ காமன்தன் பெருவாழ்வோ
பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ புயல்சுமந்து
விற்குவளை பவளமலர் மதிபூத்த விரைக்கொடியோ
அற்புதமோ சிவனருளோ அறியேனென் றதிசயித்தார்

• கட்டளைக் கலிப்பா
மா விளம் விளம் விளம் என்னும் வாய்பாட்டில் ஒவ்வோர் அரையடியும் அமையும்; நான்கடிகளையுடையது; நேரசையில் தொடங்குவது பதினோரெழுத்தும், நிரையசையில் தொடங்குவது பன்னீரெழுத்தும் பெறும்; அரையடிகள் கொண்டு விளங்கும்; ஏகாரத்தின் முடியும்.

(எ.கா)
அன்னை எத்தனை எத்தனை அன்னையோ!
அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ!
பின்னை எத்தனை எத்தனை பெண்டிரோ!
பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ!
முன்னை எத்தனை எத்தனை சன்மமோ!
மூட னாயடி யேனும றிந்திலன்!
இன்னும் எத்தனை எத்தனை சன்மமோ!
என்செய் வேன்கச்சி ஏகம்ப நாதனே!
- இதில் விளச்சீருக்குப் பதில் மாங்காய்ச்சீர் வந்தமைந்தது; எழுத்து எண்ணிக்கை மாறவில்லை.

kaviaruvi ramesh; nanRi 

சிறப்பு இடுகை

காதலில் எரிகிறேன்.....!

காதல் நடைபாதை...... வியாபரமாகிவிட்டது..... தெருவெல்லாம்..... காதல் ஜோடிகள்.....! உற்றுப்பார்தால்...... கண் எரியும்..... உன்னை உற்றுப...