இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 30 ஜூலை, 2013

மரபுக்கவிதையும் புதுக்கவிதையும்..(05)

மரபுக்கவிதையும் புதுக்கவிதையும்

இருபதாம் நூற்றாண்டில் விடுதலைக்குப் பின்னும் மரபுக் கவிதையானது பல்வேறு பரிமாணங்களில் வளர்ந்தது. மொழி, சமுதாயச் சிந்தனை, பொதுவுடமைக் கொள்கை, தலைவர்களைப் போற்றுதல், கவியரங்கக் கவிதைகள், பகுத்தறிவுக் கவிதைகள் எனப் பல்வேறு தலைப்புகளில் மரபுக் கவிதைகள் இயற்றப்பட்டன. மரபுக் கவிதையில் ஒரு பிரிவான குழந்தை இலக்கியமும் நன்கு உருப் பெற்றது.
புதுக்கவிதையைப் பொறுத்த வரை 1945 வரை உள்ள காலம்மணிக்கொடிக் காலம் என்பர் என முன்பே கண்டோம். புதுக்கவிதை வளர்ச்சியில் 1970 வரையுள்ள காலத்தைச் சேர்ந்தவர்கள் இரண்டாம் அணியினர் என்றும் 1970க்குப் பிற்பட்ட காலத்தைச் சேர்ந்தவர்கள் மூன்றாம் அணியினர் என்றும் பிரிக்கலாம். புதுக்கவிதை நன்கு பரவிய பின் புதுக்கவிதைக்கு என்றே 70க்கும் மேற்பட்ட இதழ்கள் தோன்றின. எனினும் தமிழ் உலகில் மரபுக் கவிதையும் புதுக்கவிதையும் அழியாமல் நிலைத்து வாழுகின்றனர்.
6.2.1 மரபுக் கவிதை
இக்காலத்தில் மரபுக் கவிதை இயற்றுவதில் சிறப்புடைய புகழ் பெற்ற கவிஞர்கள் பலர் உள்ளனர்.
• மீ.ப. சோமசுந்தரம்
சோமு என்று அழைக்கப்படும் இவர் கவிதை கவிதைக்காகவே எனும் தூய கவிதைக்காரர். இளவேனில், தாரகை, பொருநைக் கரையிலே, வெண்ணிலா என்ற நூல்களைத் தந்தவர்.
வாணிதாசன், முடியரசன், கண்ணதாசன் முதலியவர்களும் இவ்வகையில் குறிப்பிடத்தக்கவர்கள்.
• சுரதா
உவமைக் கவிஞர், தன்மானக் கவிஞர் என்று பாராட்டப் பெற்ற சுரதாவின் இயற்பெயர் ராஜகோபால், பாவேந்தரிடம் பற்றுக் கொண்டு தன் பெயரை மாற்றியவர். 55ல் முதன்முதலில் ஒரு கவிதை வார ஏட்டினை நடத்தினார். சாவின்முத்தம், தேன்மழை, உதட்டில் உதடு, பட்டத்தரசி, சுவரும் சுண்ணாம்பும், துறைமுகம், வார்த்தை வாசல் போன்ற பல கவிதை நூல்களைத் தந்தவர்.
• புத்தனேரி சுப்ரமணியம்
இவரும் பாவேந்தர் பரம்பரையினர். பொங்கல் விருந்து, அம்புலிப்பாட்டுப் பாடாதே, பெரியார் அண்ணா பெருமை, என்றும் இளமை, அரைமணிக்குள் இராமாயணம் என்பன படைத்தவர்.
• குலோத்துங்கன் (வா.செ.குழந்தைசாமி)
தமிழ், தமிழினம், காதல், இயற்கை பற்றி அறிவியல், ஆக்க நோக்கில் பாடுபவர். குலோத்துங்கன் கவிதைகள், வளர்க தமிழ், வாயில் திறக்கட்டும் என்பன இவர் படைத்தவை.
• சாலை இளந்திரையன்
தமிழ் எழுத்துச் சீர்திருத்த மாநாடு, அறிவு இயக்க மாநாடு நடத்தியவர். புரட்சிகரமான, சமுதாய, இலக்கியச் சிந்தனை செழிக்கச் செய்தவர். இளந்திரையன் கவிதைகள், சிலம்பின் சிறுநகை, பூத்தது மானுடம், வீறுகள் ஆயிரம், அன்னை நீ ஆட வேண்டும், காலநதி தீரத்திலே, கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே, காக்கை விடு தூது என்பன இவரது படைப்புகள்.
• மரபுக் கவிதை வடிவங்கள்
இனி மரபுக் கவிதையின் வடிவங்களான காப்பியம், சிற்றிலக்கியம், புராணம் என்பன இக்காலத்திலும் வழங்கி வருவதைக் காணலாம்.
காப்பியங்களில் இராவண காவியத்தை அடுத்து, எஸ்.கே. ராமராசனின் மேகநாதம், சொ. அரியநாயகம் எழுதிய வினோபாவின் வரலாற்றுக் காவியம், புரசை முருகேச முதலியாரின் பார்த்தனை வளர்த்த பாட்டன், சாரண பாஸ்கரனின் யூசுப் சுலைகா, கலைவாணனின்உதயம், டி.கே. ராமானுஜ கவிராயரின் மகாத்மா காந்தி மகாகாவியம், வே.சந்திரசேகரனின் காந்தீயம், மனசை கீரனின் காமராஜ் காவியம், ஜெகவீர பாண்டியனாரின் கண்ணகி காவியம், பாஞ்சாலங்குறிச்சி வீரகாவியம், சுத்தானந்த பாரதியின் பாரதசக்தி மகாகாவியம், முடியரசனின் வீரகாவியம், கருணாநந்தம் எழுதிய அண்ணா காவியம், பாரி எழுதிய பெரியார் பெருங்காவியம் என்பன தோன்றிக் காப்பிய இலக்கியத்தைத் தொடர்ந்துள்ளன.
அசலாம்பிகை அம்மையார் காந்தி புராணமும், திலகர் புராணமும் எழுதியுள்ளார்.
சிற்றிலக்கியங்களில் சில வகைகளும் தற்காலத்தில் அழியாமல் படைக்கப்பட்டுள்ளன. காமாட்சி நாதனின் வள்ளற்பெருமான் பிள்ளைத்தமிழ், புலமைப்பித்தனின் பெரியார் பிள்ளைத்தமிழ், முத்துலிங்கத்தின் எம்.ஜி.ஆர். பிள்ளைத்தமிழ், அமிர்தலிங்கரின் ம.பொ.சி. பிள்ளைத்தமிழ், இரா. செந்தாமரையின் பெரியார் உலா, அ.கு. ஆதித்தரின் தமிழ்ச் செல்வி உலா, காமராசர் உலா, புலவர் இரா. மணியனின் அண்ணா கோவை, அ.கு. ஆதித்தரின் அண்ணாத்துரைக் கோவை, கி. அரங்கசாமி எழுதிய திராவிடப் பரணி, அரங்கசீனிவாசன் எழுதிய வங்கத்துப் பரணி, இளந்தேவனின் இந்தியப் பரணி, சி. இலக்குவனாரின் மாணாக்கர் ஆற்றுப்படை, வெள்ளை வாரணனாரின்காக்கைவிடு தூது, துரை. சீனிவாசனின் கூட்டுறவுக் குறவஞ்சி என்பன சிற்றிலக்கியத்தை மறைந்து போகாமல் செய்து வருகின்றன.



nanri amarkkalam kavi ramesh_________________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக