இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 30 ஜூலை, 2013

சென்ரியூ

சென்ரியூ

கவிஞர் ஈரோடு தமிழன்பனின் “ஒரு வண்டி சென்றியூ” என்ற நூலிலிருந்து சென்றியூ எனப்படும் நகைதுளிப்பாக்களுக்கான எடுத்துக் காட்டுகள் கீழே:- (நன்றி: சென்னை பல்கலைக் கழக பாடங்கள்)
அரசியல்:
அரசியல்வாதி ஆவதற்கென்று தனித்தகுதி தேவையில்லை. எப்படிப்பட்டவர்களும் அதில் சென்று
முன்னேறி விடலாம் என்பதை,
அது வராவிட்டால் இது
இது வராவிட்டால் அது
எதுவும் வராவிட்டால் அரசியல் (ப.66)
என்னும் கவிதையில் நையாண்டி செய்கிறார் கவிஞர்.
கட்சிகள்தோறும் காணப்படும் கூட்டங்கள், தானே திரண்டனவல்ல ; திரட்டப்பட்டனவேயாகும். இதனை,
ஆயிரம் பேரோடு
வேட்பு மனுத்தாக்கல்
ஐம்பது வாக்குகள் (ப.30)
என்னும் கவிதையில் பட்டவர்த்தனமாக்கியுள்ளார்.
‘மன்னன் எப்படி, மக்கள் அப்படி’ என்பார்கள். பொறுப்பான பதவியில் உள்ள அமைச்சர் பெரு மக்களே, தாங்கள் கூடும் பொதுச்சபையில் சட்ட திட்டங்களைக் கடைப்பிடிப்பதில்லை என்றால், இவர்களால் ஆளப்படும் நாடு என்னாவது?
சட்டம் ஒழுங்கைக்
காப்பாற்ற முடியவில்லை
சட்டசபையில் (ப.31)
என்பது அதைச் சுட்டும் கவிதை.
பதவியிலிருக்கும்வரை அதிகார தோரணையில் தன் விருப்பப்படி நடப்பவராகவும் மக்களைப் பற்றிக்
கவலைப்படாதவராயும் இருப்பவர், வீட்டுக்கு அனுப்பப்பட்டதும் நாட்டைப் பற்றிச் சிந்திக்கிறார்.
பதவி இழந்த அமைச்சர்
அறிக்கை
இனி நாட்டுக்கு உழைப்பேன் (ப-63)
என்னும் கவிதை அது பற்றியதாகும்.
அரசியல்வாதிகளாகிய கட்சித் தலைவர்கள் சுய நலவாதிகள் ;தொண்டர்கள் அப்பாவிகள் என்பதை,
கட்சி தொண்டர்களுக்கு
காசு குடும்பத்துக்கு
தலைவர் மரணமுறி (ப.92)
என்னும் கவிதை புலப்படுத்துகின்றது.

_____

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக